ஆர்.எஸ்.எஸ் இயக்கத்துடனான என்னுடைய அனுபவம்...
--Prithik Ganesan
ஆர்.எஸ்.எஸ் இயக்கத்துடனான என்னுடைய அனுபவம்...
2004 டிசம்பர் 26 தமிழகத்தை சுனாமி தாக்கிய அடுத்தநாள் எனது நண்பன் ஒருவன் என்னிடம் சுனாமி மீட்பு பணிக்கு வருகிறாயா என்று அழைத்தான். ஏற்கனவே நான் படித்த கல்லூரியில் யாரெல்லாம் சுனாமி மீட்பு பணிக்கு செல்கிறீர்களோ அவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார்கள். சரி நாமும் போகலாம் என்று நண்பனுடன் கிளம்பினேன்.
திருவல்லிக்கேணியில் இருந்த ஒரு பழைய அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றான். அங்கிருந்த அனைவரும் காக்கி அரை டவுசர் அணிந்திருந்தனர். எனக்கு அது புதியதாக இருந்தது. அங்கிருந்து பல குழுக்களாக பிரிந்து ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு மீனவர் கிராமங்களுக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டோம். நான் இடம்பெற்றிருந்த குழு நயினார் குப்பம் மற்றும் ரெட்டிக்குப்பம் போன்ற சில பகுதியை பொறுப்பெடுத்திருந்தார்கள்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தின் பெயர், அதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை என்று அனைவருடைய விவரங்களையும் எங்களை சேகரிக்க சொன்னார்கள். ஒவ்வொரு குடும்பத்தின் முழு விவரங்களையும் சேகரித்ததால் பாதிக்கப்பட்ட அனைவரது துயரத்தையும் என்னால் நேரடியாக உணர முடிந்தது. ஒவ்வொருவரும் தங்களது விவரங்களை சொல்லும்போது ஏதாவது சிறு உதவியாவது கிடைத்துவிடாதா என்று ஏக்கம் அவர்களது குரலில் நிறைந்திருப்பது என்னால் உணர முடிந்தது.
மூன்று நாட்கள் சுனாமி பாதித்த பகுதிகளில் நாள் முழுவதும் சுற்றி திரிந்து இந்த விவரங்களை சேகரித்தோம். நாங்கள் சேகரித்த விவரங்களை குழுத் தலைவரிடம் அளித்த போது அவர் முதலில் செய்த காரியம் என்ன தெரியுமா தோழர்களே, நாங்கள் சேகரித்த விவரங்களில் இருந்து ஹிந்துக்களின் விவரங்கள் அடங்கிய படிவங்களை மட்டும் தனியாக பிரித்து எடுத்தது தான், நான் அவரிடம் ஏன் ஐயா பிரிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு அவர் சொன்னார் நாம நம்ம மக்களை மட்டும் தான் கவனிக்கணும் என்றார், எனக்கு புரியவில்லை ஐயா அவர்கள் அனைவரும் நம் மக்கள் தானே என்று மீண்டும் கேட்டேன் அவர் சொன்னார் நம்ம ஹிந்துக்களை மட்டும் கவனிச்சா போதும், மத்தவங்களுக்கு அவங்க மதத்தை சேர்ந்தவர்கள் உதவி செய்வார்கள் என்று, ஐயா ஹிந்துக்கள் கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் என்று எந்த பாகுபாடும் இல்லாமல் அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள், பாதிக்கப்பட்ட மக்களிடையே நாம் பிரித்து பார்க்க கூடாது, குறிப்பிட்ட மக்களுக்கு மட்டும் நாம் உதவி செய்தால் அங்கே அது பிரிவினையை ஏற்படுத்தும என்று எவ்வளவோ வாதிட்டேன் அவர் முகத்தில் அவ்வளவு கோவம் வந்துவிட்டது, இது ஹிந்துக்களின் நாடு இங்கே மற்ற மதங்கள் வேரூன்றி ஹிந்து மதத்தை அழிக்கிறார்கள், மீனவர்கள் பெரும்பாலும் கிறிஸ்துவர்கள் அவர்களுக்கு வெளிநாட்டு உதவி வரும் நாம் ஹிந்துக்களை மட்டும் கவனித்தால் போதும் என்று சொன்னார்.
அன்னைக்கு வரைக்கும் இது மத சார்பற்ற நாடு என்று தான் நினைத்திருந்தேன். பாதிக்கப்பட்ட மக்களிடையே கூட மதவாத பிரிவினைய ஏற்படுத்தும் உங்களுடன் என்னால் இனைந்து பணிபுரிய முடியாது என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துடனான எனது முதல் அனுபவமே இப்படி அமைந்துவிட்டதால் தப்பித்தேன். என்னை அங்கு அழைத்துச்சென்ற நண்பன் இன்றும் அங்கே தீவிர ஆர்.எஸ்.எஸ். காரனாக வளம் வருகிறான். என்னுடன் படித்த பலரை வாங்க இலவசமாக கராத்தே படிக்கலாம், கம்புச் சண்டை பழகலாம் என்று பலரை ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்கு அழைத்து செல்வதையே முழுநேர வேலையாக வைத்திருந்தான். ஆள் பிடிப்பதற்கு கம்புச் சண்டை, கராத்தே பயிற்சி போல் மீட்பு பணிகளும் ஒரு சாக்கு என்பதை உணர்ந்துக்கொண்டேன்.
சமீபத்தில் சென்ட்ரல் ரயில் நிலைய குண்டு வெடிப்பு நடந்த இடத்திற்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கம் மீட்பு பணிகளில் ஈடுபட்டார்கள் என்ற செய்தியை கேள்விபட்டதும் இதை எழுத வேண்டும் என்று தோன்றியது...
No comments:
Post a Comment