ஐரோப்பாவானது 17 ம் நூற்றாண்டில் பெண்ணுக்கும் உயிர் உண்டா என விவாதம் நடத்திக் கொண்டிருந்தபோது, அஞ்ஞான இருள் துடைக்க வந்த அரபுலகத்தில் 1435 ஆண்டுகளுக்கு முன்பே பெண்ணுக்கும் சம உரிமைகளும், பொறுப்புகளும் உள்ளன என சட்டமியற்றியது மட்டுமல்ல, பெண்ணுக்கு அவர்களின் உரிமைகளை வழங்கி, தாம் ஒரு உன்னதாமாக சமூகம் எனவும் நிரூபித்தது.
இறைவனின் திருமறை வழி வந்த அந்த சமூகம் திருமறையின் கீழ்காணும் வசனம் மூலம் பெண் என்பவளும் ஆணைப் போலவே உரிமைகள் பெற்ற ஒரு படைப்பு என உணர்ந்து கொண்டது.
மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான். (04:01)
மேலும் எதன் முலம் உங்களில் சிலரை வேறு சிலரைவிட அல்லாஹ் மேன்மையாக்கியிருக்கின்றானோ, அதனை (அடையவேண்டுமென்று) பேராசை கொள்ளாதீர்கள்; ஆண்களுக்கு, அவர்கள் சம்பாதித்த(வற்றில் உரிய) பங்குண்டு; (அவ்வாறே) பெண்களுக்கும், அவர்கள் சம்பாதித்(வற்றில் உரிய) பங்குண்டு; எனவே அல்லாஹ்விடம் அவன் அருளைக் கேளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான். (04:32)
பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற (சொத்)தில் ஆண்களுக்கு பாகமுண்டு; அவ்வாறே பெற்றோரோ, நெருங்கிய உறவினரோ விட்டுச் சென்ற (சொத்)தில் பெண்களுக்கும் பாகமுண்டு - (அதிலிருந்துள்ள சொத்து) குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரியே; (இது அல்லாஹ்வினால்) விதிக்கப்பட்ட பாகமாகும். (04:07)
மேற்கண்ட இறைவசனங்கள் ஆண்களைப் போலவே பெண்களும் அனைத்து சமபங்கு பெற்றவர்கள் என்று தெளிவாகக் கூறி அதை நடைமுறையிலும் செயல்படுத்திக் காட்டியுள்ளது. இறைவன் பெண்களுக்கென வழங்கிய உரிமைகளை ஆட்சியாளர்கள் கூட அகற்றவோ குறைக்கவோ முயன்ற போது, இறையச்சம் அச் செயல்களில் ஈடுபடுவதிலிருந்து அவர்களைத் தடுத்துக் கொண்டது என்பது வரலாற்று உண்மையாகும்.
இஸ்லாம் பெண்ணுக்கு எழுத்துரிமை, கல்வி கற்க உரிமை, பேச்சுரிமை, சொத்துரிமை, விவாக மற்றும் விவாகரத்து உரிமை (பல மதங்கள் இந்த உரிமையைப் பெண்களுக்கு இன்னும் வழங்கவில்லை) போன்ற இன்னும் ஆண் பெற்றுள்ள அனைத்து உரிமைகளையும் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கி கௌரவித்துள்ளது மட்டுமல்லாமல், பெண்ணின் முப்பருவங்களைச் சுட்டிக்காட்டி, குழந்தை, மனைவி, தாய் ஆகிய மூன்று நிலைகளில் அவளுக்குள்ள தனிச் சிறப்புக்களையும் தெளிவாகவே சுட்டி செயல்படுத்தியும் வருகிறது.
பெண்குழந்தைகள் பெறுவது சாபக் கேடு என்று கருவிலேயே அவற்றைக் கொல்லும் இந்த நாளிலே, பெண் குழந்தையின் வளர்ப்பின் சிறப்பு பற்றி 1435 ஆண்டுக்கு முன்னரே இஸ்லாம் எவ்வளவு பெரிய சிகரத்தில் பெண்ணின் பெருமையை வைத்துள்ளது என்றால்,
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள், யாரிடம் இரண்டு பெண் குழந்தைகள் இருந்து அவற்றை நல்ல முறையில் பராமரித்து கல்வி புகட்டி, ஒழுக்கத்துடன் வளர்க்கிறாரோ அவரும்நானும் சொர்க்கத்தில் இவ்வாறு இருப்போம் என தம் இரு விரல்களையும் சமமாக நிறுத்தி சுட்டிக் காட்டினார்கள்.
அதுபோலவே, உங்களில் சிறந்தவர் யார் எனில், உங்கள் மனைவியிடம் சிறந்த முறையில் நடந்து கொள்கிறாரோ அவரே! என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்.
ஒருமுறை ஒரு மனிதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்களிடம் இவ்வாறு வினவினார்கள் : என்னுடைய முதல் சேவையைப் பெற்றுக் கொள்ள உரிமை படைத்தவர் யார் என வினவியபோது, உனது தாய் என நபி ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் பதிலளித்தார்கள். மீண்டும் அவர் வினவிய போதும் தாய் என்றும், மூன்றாம் முறையும் வினவிய போதும் தாய் என்றும், நான்காவது முறையாக வினவிய பொழுது தான் தந்தை எனப் பதில் கூறினார்கள்.
இவ்வாறு அன்றும் சரி இன்றும் சரி வயதானவர்களை மதிப்பதில் இஸ்லாம் கற்றுக் கொடுத்த அளவும், அதே போலப் பெண்களைக் கௌரவிப்பதில் இஸ்லாம் வழங்கியுள்ள நெறிமுறைகளும் உலகின் வேறு எந்த மதமும் வழங்காதவை.
பெண்களின் பிரசவ வலியின் போது, மருத்துவமனையில் வலியின் தீவிரத்தைக் குறைக்க மயக்க மருந்து கொடுத்து, பிரசவம் பார்ப்பதுண்டு. அந்த மயக்க மருந்து கொடுப்பதை இன்றும் ஒரு சமூகம் எதிர்த்து வருகிறது. ஏனெனில், அது ஏவாளுடன் பிறந்த, இறைவன் ஏவாளின் தவறுக்கு வழங்கிய தண்டனையான பிறவிப் பாவம் என இச்சமூகம் கருதுவது தான் காரணமாகும். மயக்க மருந்து கொடுத்து அந்தத் தண்டனையைப் பெறுவதிலிருந்து அவளை விடுவிக்கக் கூடாது என இன்றும் பெண்கள் மீத திராத பாவச் சுமையை - அதவாது அன்று ஏவாள் செய்த பாவத்திற்கு எந்த பாவமும் செய்யாத இன்றைய பெண்களும் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும், அதிலிருந்து அவளை விடுவிக்கக் கூடது என இன்றும் பெண்கள் மீது தீராத பாவச் சுமையை ஏற்றி வருவது போல இஸ்லாம் பொறுப்பின்றி எந்த நிலையிலும் ஈடுபடவில்லை.
அவளது மாதவிடாய்க் காலத்தில் அவளைத் தீண்டத் தகாத பிறவியாக இன்னும் பல்வேறு சமூகங்கள் அவளை நடத்தியும், அக்காலத்தில் அவளை வாழும் இடங்களில் இருந்து தனிமைப்படுத்தியும் வருவது நாம அறிந்ததே.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் பள்ளியில் இருக்கும் போது ஆயிஷா ரளியல்லாஹ¤ அன்ஹா அவர்களை அழைத்து ஆயிஷாவே! அந்த ஆடையை என்னிடம் எடுத்துத் தாருங்கள் என்று கேட்டார்கள். நான் தொடத் தகாதவளாக உள்ளேன். (அதாவது மாதவிடாய்ப் பெண்ணாக உள்ளேன்) என்று கூறினேன். மாதவிடாய் உனது கையில் இல்லையே, என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதும், அந்த ஆடையை எடுத்து நபிகள் நாயகம் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்களிடம் கொடுத்தேன். (அறிவிப்பவர் : ஆயிஸா ரளியல்லாஹ¤ அன்ஹா (நூல் : நஸயீ).
இன்னும் ஒரு சமூகம் கணவன் இறந்து விட்டால் அவளை எரியும் நெருப்பில் ஏற்றி அவளை மாய்த்துக் கொண்டிருக்கிறது. அவளை மொட்டையடித்து, அவளுக்கென தனி ஆடை கொடுத்து, முக்கியமான நிகழ்வுகளில் அவளை தீண்டத்தகாதவளாக சமூக பகிஷ்காரம் செய்தும் வருகிறது. மேலும், இவர்கள் மறுமணம் என்றால் என்ன என்பதையே நினைத்தும் பார்க்க தகுதியற்றவர்களாக, அச்சமூகத்தில் சிறுமைப்படுத்தப் படுகின்றனர்.
மேற்கண்ட நிலைகள் உலகின மிகப் பெரும் மதங்களில் நடைபெறம் நிகழ்வுகளாகும். இவை எல்லாம் 1435 ஆண்டுக்கு முன்னரே இஸ்லாத்தின் வரவால் துடைத்தெறியப்பட்ட சமூகக் கழிவுகளாகும்.
பெண்ணின் குழந்தைப் பருவத்தில் இருந்து ஆரம்பித்து அவள் முதமை அடையும் வரையும், அவளது இறுதி நாள் வரையும் இஸ்லாம் தந்த சமூக பாதுகாப்பு அளவிட இயலாதது. அந்தப் பாதுகாப்பை இஸ்லாம் இன்றும் ஆதாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.
சிசுவதையும், வரதட்சணைக் கொடுமையால் ஸ்டவ் வெடித்து பெண் சாவதும், வயதான காலத்தில் கவனிப்பாரற்று விடப்படும் முதியவர்களின் எண்ணிக்கையும் மற்ற சமூகங்களுடன் ஒப்பிடும் போது முஸ்லிம்களிடத்தில் இவை குறைவான நிகழ்வுகளே என புள்ளி விபரங்கள் நிரூபிக்கின்றன..
(இஸ்லாட்தில் ஆண் தான் பெண்ணுக்கு மஹர் கொடுக்க வேண்டும்)
இன்றைக்கு முதலாளித்துவ சிந்தனையின் தாக்கம் கம்யூனிஸ சித்தாந்தத்தையும், கடவுளே இல்லை என மறுப்போரையும் ஆட்கொண்டதன் விளைவு, இன்றைக்கு முஸ்லிம் பெண்கள் அணிந்திருக்கும் பர்தா முறையைப் பார்த்து, முதலாளித்துவம் விமர்சிப்பது போலவே இவர்களும் விமர்சிக்க ஆரம்பிக்கின்றார்கள்.
முதலாளித்துவத்திற்கு தன்னுடைய கடைச் சரக்கை விற்க பெண்கள் கவர்ச்சிப் பொருளாக மாற வேண்டும், அப்படி மாறினால் அந்த தன்னுடைய சரக்கு விற்பனையாகும் என்பதால், பெண்ணை அவளது மானத்தை, அவளது கண்ணியத்தை காற்றில் பறக்க விட்டு விட்டு, தன்னுடைய பணப்பையை நிரப்பிக் கொள்கின்றது..
இதனைத் தவிர்க்கும் ஒவ்வொரு பெண்ணும் பத்தாம் பசலி என அழைக்கப்படுகின்றாள். கடைச்சரக்காக, காட்சிப் பொருளாக மாறாக ஒவ்வொரு பெண்ணும் விமர்சிக்கப்படுகின்றாள். அந்த வகையில் கடைச் சரக்காக மாறாது, பெண்மையின் மென்மையை மூடி மறைத்து, அவர்களை கண்ணியப்படுத்தும் அந்த பர்தா உடையும் இன்றைக்கு விமர்சனத்திற்குள்ளாகின்றது. அந்த உடை அடக்குமுறையின் சின்னமாகப் பார்க்கப்படுகின்றது. இந்த விமர்சனப் பார்வைப் பழுதில், கம்யூனிஸம் பேசும் சகோதரர்களும், கடவுளே இல்லை எனப் பேசும் சகோதரர்களும் வீழ்ந்து விட்டில் பூச்சிகளாய், கிணற்றுத் தவளைகளாய்க் கத்துவது அவர்களது அறியாமையைத் தான் காட்டுகின்றது.
ஒரு மருத்துவ ஆய்வு அறிக்கை இவ்வாறு கூறுகின்றது:
ஆணுக்கு காம இச்சைத்தூண்டுதல்கள் அவன் பெண்ணைப் பார்க்கும் பார்வையிலேயே ஆரம்பமாகி விடுகின்றது. ஆனால் பெண்ணுக்கோ அவளைத் தொடும் பொழுது தான் காம இச்சை உடலிலே தூண்டப்படுகின்றது.
பெண் கவர்ச்சியானவள். கவர்ச்சியாக அவள் உடை அணிந்து செல்லும் பொழுது, அவளது அங்கங்களைப் பார்க்கும் ஆடவனுக்கு காம இச்சை தூண்டப்படுகின்றது. சமூகக் குற்றம் அவனது பார்வையிலிருந்து ஆரம்பமாகின்றது. அந்தக் குற்றம் நிகழ அவள் உடுத்தும் உடையழகு காரணமாகி விடுகின்றது. எனவே, அந்த பெண்மையின் அழகை, மென்மையை மூடி மறைத்துக் கொள்ளுங்கள் என இஸ்லாம் கூறி, ஆணையும் பெண்ணையும் சமூகக் குற்றத்தில் ஈடுபடாமல் பாதுகாக்கின்றது.
காரணம்..! இந்தப் பூமி சமூகக் குற்றங்கள் இல்லாத அமைதியான பிரதேசமாக இருக்க வேண்டும் என்பதே அல்லாமல், அவளை மூடி மறைத்து வீட்டில் முடக்கிப் போட வேண்டும் என்பதனால் அல்ல என்பதை சகோதரர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். பகுத்தறிவு என்பது கண்ணுக்கும், புலனுக்கும் எட்டுவது மட்டுமல்;ல, அதற்கு அப்பாலும் உண்டு என்பதையும் உணர்ந்து செயல்படுவது நன்று.
இன்றைக்கு பெண்ணியம் என்றும் ஆணாதிக்கம் என்றும் தமிழுக்குப் புதுப் புது வார்த்தைகளை இந்த நவீன? சிந்தனாவாதிகள் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துகின்றார்கள்.
மனித வாழ்வில் குடும்ப அமைப்பு என்பது முக்கியமானதும், இயற்கையானதும் கூட. ஆண் அவனது பொறுப்பையும், பெண் அவளது பொறுப்பையும் ஏற்று, அவரவர்களுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள இறைவன் வழங்கியுள்ள தகவமைப்புகளுக்குத் தக்கவாறு தங்களது பணிகளைச் செய்வதில் தான், இயற்கையிலேயே ஆண்-பெண் என இறைவன் வித்தியாசப்படுத்திப் படைத்திருப்பதன் ரகசியம் அடங்கியுள்ளது.
இன்றைக்கு இந்த குடும்ப அமைப்பை சீர்குலைத்த பெருமை மேலைநாட்டு அநாகரீகங்களின் தாக்கம் என்றால் அது மிகையில்லை. உலகப் போர்களுக்குப் பின் ஆணும், பெண்ணும் சமம் என்ற கோஷங்கள் மேலைநாடுகளில் எழும்பியதன் காரணத்தையும், அதே கோஷம் இன்னும் இஸ்லாமிய நாடுகளில் ஏன் எழும்பவில்லை, எழுப்பப்படவில்லை என்ற காரணத்தையும் ஆய்வு செய்வது நல்லது.
ஏனெனில் மேலைநாடுகளில் வாழ்ந்த அன்றைய பெண்களுக்கு உயிர் உண்டா? என்றே அவர்கள் நம்பவில்லை. ஒரு போகப் பொருளாகத் தான் நினைத்தார்கள். எனவே அவர்கள் தங்களது உரிமைகளை போராடிப் பெற வேண்டிய கட்டாயம் இருந்தது. இன்றைக்கும் நம் நாட்டில் தொட்டில் திட்டங்கள் சொல்வதென்ன?
ஆணாதிக்கமும் அல்ல, பெண்ணியமும் அல்ல. பொருளாதாரம் தான் காரணமாகும். மகனுக்கு சீதனம் மற்றும் வரதட்சணை பேசுவதில் ஆணை விட பெண்ணே கறாறாக இருக்கின்றாள், அப்படிக் கேட்பவளும் பெண்தானே எனும் போது, இது பெண்ணாதிக்கம் என்று சொல்வோமா? அல்லது சமூகச் சீர்கேடு என்று சொல்வோமா?
இன்றைக்கு நம் நாட்டில் பெண்கள் இயக்கம் என்றும், பெண்களின் உரிமைப் பாதுகாப்புக் கழகங்கள் என்றும் பெண்ணியம் பேசுவோர் அதிகரித்துள்ளனர். இவை யாவும் மேலைநாடுகளின் தாக்கம் எனலாம். இந்திய கலாச்சாரத்தில் பெண்கள் வீட்டுப் பொறுப்புக்களையும், அதனுடன் குழந்தை வளர்ப்பு, வீட்டு நிர்வாகம் என பார்த்துக் கொண்டிருந்தது. போக இன்றைக்கு, ஆணாதிக்கத்திலிருந்து விடுபடுவோம் வாருங்கள் என்ற குரலைக் கேட்டு மயங்கி, வீட்டை விட்டு தங்களது பொறுப்புக்களை உதறித் தள்ளி விட்டு, சுதந்திரம்! சுதந்திரம் என நம் தேசப் பெண்கள் வீதிக்கு வருவது, இந்திய தேசத்தின் குடும்ப அமைப்புகளைச் சீரழித்துள்ளது. இதன் காரணமாக வீடு அமைதியாக இருந்த இடம் என்பது மாறி, பல்வேறு அவலங்களும், சித்ரவதைகளும், போராட்டங்களும் நடைபெறக் கூடிய களமாக மாறி வருகின்றது.
இதன் காரணமாக வீட்டில் வளரக் கூடிய இளம் பிஞ்சுகள், இளமையிலேயே வெம்பி, பிஞ்சிலே பழுத்த பழங்களாக மாறி வருகின்ற அவலம், இன்றைக்கு வீதிக்கு வீதி குற்றவாளிகளாகக் காட்டியளிக்கும் இந்திய சேத்தின் இளம் இரத்தங்களே, இதற்கான சாட்சியங்களாகும்.
இளம் குற்றவாளிகள் அதிகமாகின்றார்கள். காரணம் கண்டுபிடிக்கப்படவில்லையா? அல்லது காரணங்கள் தெரிந்தும் நம் கை மீறிச் சென்று விட்ட நம் தவறான போக்குகளா? சிந்திக்க வேண்டியது இந்திய சமூகத்தின் மீது கட்டாயமாகும்.
இத்தகைய அவலங்களைத் துடைத்தெறிந்து விட்டு, சமூகக் கழிவுகளிலிருந்து பெண்களைக் காப்பாற்றி, பெண்ணின் பெருமைகளைப் போற்றிப் பாதுகாத்து வரும் இஸ்லாத்தின் தூதை அறிந்து கொள்ளவது முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, மாற்றுமத சகோதர சகோதரிகளுக்கும் அத்தகைய உரிமை உண்டு.
ஏனெனில் இது ஒன்றே உங்களையும் எங்களையும் படைத்த ஒரே இறைவனின் வாழ்க்கை நெறியாகும். அதன் பெயர் இஸ்லாம் என்பதாகும்.
இஸ்லாமியப் பெண்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய பொதுவான உரிமைகள்:
நிச்சயமாக பெண்கள் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய பொதுவான உரிமைகள் உள்ளன. அவற்றை அவள் விரும்பும் போது பூரணமாகச் செய்து கொள்வதைச் சமூகம் அங்கீகரிக்கவும் செய்கின்றது. இன்றைக்கு முஸ்லிம் பெண்களிடத்தில் இருக்கின்ற அறியாமையின் காரணமாக, இஸ்லாம் அவர்களுக்கு வழங்கியருக்கின்ற உரிமைகளைப் பற்றிக் கூட அறிந்திருக்காத நிலையில், பல விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழவும் அதில் அவர்களை இழக்க வேண்டிய நிலைகளும் உருவாகி விடுகின்றன.
இதற்கு இஸ்லாத்தில் ஆணாதிக்கம் என்று குற்றம் சுமத்தப்படுகின்றது. காரணம் இஸ்லாமியச் சட்டங்களை ஆண்களும், பெண்களும் அறியாதவர்களாக இருக்கின்றார்கள் என்பதும், தங்களைச் சூழ்ந்துள்ள ஆணாதிக்க சமூகத்தின் தாக்கங்களில் முஸ்லிம்கள் தங்களை இழந்து விடுவதன் காரணமாகவும் நிகழ்ந்து விடுகின்ற அத்தகைய சம்பவங்கள் இஸ்லாத்திற்கு அவப் பெயரை ஈட்டித் தந்து விடுகின்றன. எனவே, ஆணோ அல்லது பெண்ணோ இஸ்லாம் தனக்கு வழங்கியிருக்கின்ற உரிமைகள் பற்றி அறிந்து கொள்ள முயற்சிக்க வேண்டியவது அவரவர் மீதுள்ள கடமையாகும்.
பெண்களுக்கான உரிமைகளில் சில :
சொந்தமாக்கிக் கொள்ளல் :
வீடுகள், விவசாய நிலங்கள், தோட்டங்கள், வெள்ளி, தங்கம் போன்ற ஆபரண வகைகள், கால்நடை வகைகள் இவற்றில் விரும்பியவற்றை ஒரு பெண் தனக்குச் சொந்தமாக்கிக் கொள்ளலாம். அப்பெண் தாயாக அல்லது மகளாக அல்லது சகோதரியாக இருப்பினும் சரி.
திருமணம் :
திருமணம் செய்வது, கணவனைத் தேர்வு செய்வது, தனக்கு விருப்பமில்லாதவனை ஏற்க மறுப்பது, தனக்கு இடையூறு ஏற்பட்டால் திருமண ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வது போன்றவற்றிலும் அவள் உரிமை பெறுகிறாள். இவை பெண்களுக்குரிய உரிமைகள் என்பதில் இஸ்லாம் மற்ற மதங்களை விட தனித்துவமாக விளங்குகின்றது.
கல்வி கற்கும் உரிமை :
தனக்கு அவசியமானவற்றைக் கற்றுக் கொள்ளும் உரிமை படைத்தவள். இறைவனைப் பற்றியும், இறைமறையைப் பற்றியும், இறைத்தூதரின் வாழ்வு, ஒழுக்க மாண்புகள் மற்றும் இந்த உலக வாழ்வுக்குரிய அனைத்துக் கல்விகளையும், மனித சமுதாயத்திற்குப் பயன்படக் கூடியவற்றையும் கற்றுக் கொள்ளும்படி இறைமறை ஆணையும்,பெண்ணையும் வலியுறுத்திக் கூறுகின்றது. அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியானவன் வேறு யாருமில்லை என்பதை அறிந்து கொள் (47:19) என அல்லாஹ்வும், கல்வியைத் தேடுவது ஆண், பெண் அனைவர் மீதும் கடமையாகும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் கல்வி கற்க வேண்டிய அவசியத்தை உணர்த்தியிருப்பதால், இஸ்லாத்தில் கல்வி கற்பதன் அவசியம் பற்றி நமக்குத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
செலவு செய்தல் :
தனது பொருளில் தான் நாடியதைத் தர்மம் செய்து கொள்வதற்கும், தனக்கும் தனது கணவன், பிள்ளைகள், தாய், தந்தையர்கள் இவர்களில் தான் விரும்பியவர்களுக்கு வீண், விரயமில்லாத அளவுக்கு செலவு செய்து கொள்ள உரிமை பெறுகிறாள். இவ்விஷயத்தல் இவர்களும் ஆண்களைப் போன்றே செலவு செய்யும் உரிமையைப் பெறுகின்றார்கள்.
விருப்பு, வெறுப்புக் கொள்ளுதல் :
அவள் நல்ல பெண்களை விரும்பவும், அவர்களைச் சந்திக்கவும் செய்யலாம். இன்னும் அவர்களுக்குத் தபால்கள் அனுப்பி அவர்களின் நிலைமைகளைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். கஷ்ட காலங்களில் அவர்களுக்கு ஆறுதலும் கூறிக் கொள்ளலாம். அல்லாஹ்விற்காக கெட்ட பெண்களை வெறுத்து, அவர்களை விட்டும் ஒதுங்கி விடுவதும் கூடும். (இங்கே ஒன்றைக் கவனிக்க வேண்டும்.. அந்நிய ஆணும், அந்நியப் பெண்ணும் சந்திப்புகள் நடத்துவதையோ, ஒன்று கூடுவதையோ இஸ்லாம் அனுப்பதில்லை. திருமணம் முடிக்க அனுமதி மறுக்கப்பட்டிருக்கின்ற உறவுகள் தவிர்த்து மற்ற ஆண்களுடன் பெண்கள் கலந்து பழகுவதை அனுமதிப்பதில்லை. இதன் விளைவுகளை இன்றைக்கு மேலை நாடுகள் அனுபவித்து வருகின்றன. ஒழுக்கச் சீர்கேட்டிற்கு இவை தாம் முக்கிய பங்கு வகிக்கின்றன)
மரண சாசனம் :
அவளின் சொத்தில் மூன்றில் ஒன்றை அவளது ஜீவித காலத்தில் மரண சாசனம் எழுதிக் கொள்வதற்கும் அதை எவ்வித ஆட்சேபணை செய்யாமல் செயல்படுத்துவதற்கும் அவளுக்கு உரிமையுண்டு. ஏனெனில் மரண சாசனம் எழுதுவதென்பது பொதுவான மனித உரிமைகளைச் சார்ந்ததாகும். எனவே இது ஆண்களுக்கிருப்பது போன்று பெண்களுக்குமிருக்கிறது. ஏனெனில் அல்லாஹ்விடம் நன்மையைப் பெறுவதை விட்டு யாரையும் யாரும் தடுக்க முடியாது. என்றாலும் மரண சாசனம் மூன்றில் ஒரு பகுதியை விட அதிகமாகமலிப்பது நிபந்தனையாகும். இதில் ஆண்களும் பெண்களும் சமமே.
பட்டாடை தங்கம் அணிதல் :
பட்டையும், தங்கத்தையும் பெண்கள் அணிந்து கொள்வது கூடும். இவ்விரண்டும் ஆண்களுக்குத் தடுக்கப்பட்டதாகும். ஒரு பெண் தனது கணவனுக்கு முன்னிலையில் தான் விரும்பும் வகையிலும், அது போல் தன் கணவன் விரும்பும் வகையிலும் அவனுடன் குறைந்த ஆடை அல்லது ஆடையற்ற நிலையில் மற்றும் தலை, கழுத்து, மார்பு முதலியவற்றை தனது கணவனுடன் தனித்திருக்கும் பொழுது திறந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.
அலங்கரித்துக் கொள்ளல் :
தனது கணவனுக்காக தன்னை அலங்கரித்துக் கொள்ள உரிமை பெறுகிறாள். எனவே அவள் சுர்மா என்ற கண்ணழகு இட்டுக் கொள்ளவும், கன்னங்களை மேக்கப் சாதனங்களையிட்டு அழகுபடுத்திக் கொள்ளுதல், உதட்டுச் சாயமிட்டுக் கொள்ளுதல், மிக அழகிய அணிகலன்களை அணிந்து கொள்ளவும் உரிமை படைத்தவளாகின்றாள். எனினும் முஸ்லிமல்லாத மற்றும் தவறான நடத்தையுள்ள மற்றும் நடிகைகளையும் அநாச்சாரத்தில் மூழ்கிக் கொண்டிருக்கின்ற மாடல் அழகிகளையும் போல அறைகுறை ஆடை அணிவதையும், அவர்களைப் போலத் தோற்றமளிப்பதும் கூடாது.
உண்பது, குடிப்பது :
நல்ல சுவையான பானங்களை பருகவும் அதுபோன்ற உணவுகளை உண்ணவும் அவளுக்கு உரிமையுண்டு. உண்பதிலும் குடிப்பதிலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மத்தியில் எந்தப் பாகுபாடும் இல்லை. இவ்விரண்டில் ஆண்களுக்கு அனுமதிக்கப்பட்ட அனைத்தும் பெண்களுக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது. அல்லாஹ் கூறுகிறான் :
உண்ணுங்கள் பருகுங்கள், ஆனால் வீண் விரயம் செய்யாதீர்கள். நிச்சயமாக வீண் விரயம் செய்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை. (7:31). இங்கு இருபாலரையும் நோக்கியே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Source From: https://www.facebook.com/AlIslamIcNotes/posts/236372989807622
மேலும் பார்க்க:
http://www.youtube.com/watch?v=rvIr2yFvCfE
இஸ்லாம் பெண்களின் உரிமையை....? 1
http://www.youtube.com/watch?v=R73WpSUywHQ
இஸ்லாம் பெண்களின் உரிமையை....2
http://www.youtube.com/watch?v=2qJ2HcepkLI
இஸ்லாம் வழியில் பெண்களின் உரிமைகள்
http://www.youtube.com/watch?v=zYpTKDSU76c
பெண்களுக்கு விவாகரத்து உரிமை?
http://www.youtube.com/watch?v=d1cOMoEY6t4